போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக் கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி வந்த புகாரில் ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று கைது செய்தனர்.

இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்படமைன் போதைப் பொருள் தயாரிக்க பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த 15-ம்தேதி போலீஸார் சோதனை செய்தனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. இவர் திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளராகவும், சினிமா தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் சிக்கியதையடுத்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்புபிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே தமிழகத்துக்கு அனுப்பப்பட்ட ரூ.1,200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் குஜராத் கடலோர பகுதியில் சிக்கியது. கடந்த மாதம் 29-ம் தேதி மதுரையில் 2 ரயில் பயணிகளிடம் 36 கிலோபோதைப் பொருள், சென்னை கொடுங்கையூரில் குடான் ஒன்றில்6 கிலோ போதை பொருளும் கைப்பற்றப்பட்டது. இவற்றை இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கடத்தலிலும் ஜாபர் சாதிக்குக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை தலைமை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் கூறியதாவது: உணவுப் பொருட்கள் என்ற பெயரில் அதிகளவில் இந்தியாவிலிருந்து போதைப் பொருள் அனுப்பப்படுவதாக நியூசிலாந்து சுங்கத் துறை மற்றும் ஆஸ்திரேலியா போலீஸார் தகவல் தெரிவித்தனர். அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவும், இந்தியாவில் இருந்துதான் இந்த பார்சல் வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து டெல்லி போலீஸாருடன் இணைந்து நாங்கள் விசாரணை மேற்கொண்டோம். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், 50 கிலோ போதைப் பொருளை ஹெல்த்மிக்ஸ் உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து பேக்கிங் செய்வதை கையும் களவுமாக பிடித்தோம்.

இதன் பின்னணியில் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் இருப்பது தெரியவந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளில் உணவு பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் 3,500 கிலோ போதைப் பொருள் தயாரிப்புக்கான மூலப் பொருளை தேங்காய்பவுடர் மற்றும் உலர் பழங்களில்மறைத்து வைத்து ஆஸ்திரேலியாவுக்கு 45 பார்சல்களில் அனுப்பியுள்ளார். இது மெதமடமைன் அல்லது கிரிஸ்டல் மெத் எனப்படும் போதை பொருளில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல் இருக்கும்.

இந்தியாவிலிருந்து பல வழிகளில் போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளில் போதைப் பொருள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதைப்பொருளை தயாரிக்க லூதியானாவில் ரகசிய ஆய்வுக் கூடம் செயல்பட்டுள்ளது. இங்கு மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கடந்தாண்டுநவம்பரில் இந்தியா வந்து தயாரித்துகொடுத்துள்ளனர். இவர்களை ஜாபர் சாதிக்குடன், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கும்பல் அனுப்பியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக போதைப் பொருளை கடத்தி வந்தஜாபர் சாதிக், தனது ஆட்கள் சிக்கியதும் தலைமறைவானார். இவர்திருவனந்தபுரம், மும்பை, புனேமற்றும் ஹைதராபாத் வழியாக ஜெய்ப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த ஜாபர் சாதிக்? - போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதிக் ஜேஎஸ்எம் குழுமம் என்ற பெயரில் முதலில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளார். அதன்பின் சினிமாத் துறையில் முதலீடு செய்து இறைவன் மிகப் பெரியவன், மாயவலை மற்றும் மங்கை ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இவரது நான்காவது திரைப்படம் விஆர்07இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையில் ஒட்டல் ஒன்றையும் இவர் வாங்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE