தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 2,099 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்; 799 பேர் கைது - காவல் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஆண்டில் 2024 ஜனவரி வரை 511 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 799 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக 2,099 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா, 8,038 மாத்திரைகள் மற்றும் 113 கி.கி. மற்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, தமிழக முதல்வர் கடந்த 2022 ஆகஸ்ட் 10-ம் தேதி போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் முதல் மாநில மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், முதன்மை துறைச் செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் தேவையைக் குறைக்கவும் புதிய உத்திகளை மாநாட்டில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.

போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்காக, தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த 2022-ம் ஆண்டு 28,383 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 14,934 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், இது 2019 ஆம் ஆண்டை விட 154% அதிகமாகும் (11,418), 2020-ஐ விட 61% அதிகமாகும் (15,144 கி.கி.) மற்றும் 2021-ஐ விட 33% அதிகமாகும் (20,431 கி.கி.). 2023-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 14,770 பேர் மீது மொத்தம் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23,364 கிலோ கஞ்சா, 0.953 கி.கி. ஹெராயின், 39910 மாத்திரைகள் மற்றும் 1239 கி.கி. மற்ற போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நடப்பு ஆண்டில் 2024 ஜனவரி வரை, 511 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 799 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக 2,099 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா, 8,038 மாத்திரைகள் மற்றும் 113 கி.கி. மற்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாத்திரைகள்: கஞ்சாவின் கடத்தலுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடு காரணமாக, போதைப்பொருள் சார்ந்த நபர்கள் திட்டமிடப்பட்ட மருந்துகளை மனமயக்கப் பொருட்களாக துஷ்பிரயோகம் செய்கின்றனர். இந்த நிகழ்வு மாற்று விளைவு என்று அழைக்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட மருந்துகளின் அங்கீகரிக்கப்படாத விற்பனைக்கு எதிரான இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக மாத்திரைகள் கணிசமான அளவு கைப்பற்றப்பட்டது. 2019-இல் 420 மாத்திரைகள் மற்றும் 2020-இல் 555 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது 2021-இல் 11,133 ஆகவும், 2022-இல் 63,848 ஆகவும், 2023-இல் 39,910 ஆகவும் அதிகரித்துள்ளது.

குண்டர் சட்டத்தில் 1,501 பேர் மீது நடவடிக்கை: மாநில அளவிலான மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவைப் பின்பற்றி, அனைத்து வழக்குகளிலும் முன் மற்றும் பின் இணைப்புகள் குறித்து ஆழமான விசாரணை நடத்தப்படுகிறது. இதன்மூலம் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 825 கிங்-பின் எனப்படும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் சொத்துக் குற்றங்களில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்திக் கட்டு படுத்தப்பட்டனர்.

ஆகஸ்ட் 2022 முதல் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் குற்றங்களில் தொடர்புடைய 40,039 குற்றவாளிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் 16,432 குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரமான பத்திரங்களை மீறிய குற்றத்துக்காக 2,077 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிரபல போதைப்பொருள் குற்றவாளிகளும் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 1,501 போதைப்பொருள் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8.44 கோடி சொத்துகள் முடக்கம்: போதைப்பொருள் குற்றவாளிகளின் மேற்படி குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட பலன்களைப் பறிப்பதற்காக, NDPS சட்டத்தின் கீழ் வழக்குகளில் நிதி விசாரணை நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 2022 முதல் ரூ.18.44 கோடி மதிப்புள்ள 47 அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் 6,124 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

கூட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களும் அழிக்கப்படுகின்றன. 2022-ஆம் ஆண்டில் மொத்தம் 11,306 கி.கி. கஞ்சா, 78 கி.கி. மெத்தம்பேட்டமைன், 4.500 கி.கி. டயசீபாம் மாத்திரைகள் அழிக்கப்பட்டன. 2023 ஆம் ஆண்டில், சுமார் 18,880 கிலோ கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் உரிய நடைமுறையைப் பின்பற்றி அழிக்கப்பட்டுள்ளன.

இலங்கை இலக்கு... - போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு உள்ளூர் நுகர்வுக்காக கஞ்சா பெருமளவு கடத்தப்படுவது குறைந்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் 7,600 கி.கி. கஞ்சா கைப்பற்றப்பட்ட 21 முக்கிய வழக்குகளை பகுப்பாய்வு செய்தததில் கைப்பற்றப்பட்ட அளவில் சுமார் 6,900 கி.கி. கஞ்சா 90% இலங்கையை இலக்காகக் கொண்டு கடத்தப்பட்டதும், மற்றும் 205 கி.கி. கேரள மாநிலத்துக்கும் இலக்காக கொண்டு கடத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு காவல் துறையின் கடுமையான நடவடிக்கை காரணமாக, பெரும் குற்றவாளிகள் தங்கள் அடையாளங்களை தவிர்ப்பதற்காக மொத்தமாக தமிழகத்துக்கு கடத்துவதில்லை மற்றும் பெரும்பாலான முக்கிய கைப்பற்றுதல்கள் இலங்கையை இலக்காகக் கொண்டுள்ளன.

மேலும், போதைப்பொருட்கள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக பள்ளி, கல்லூரி மற்று சமூக அளவில் ஏற்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE