ரூ.1,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது @ திருச்சி

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி (51). விவசாயத் தொழிலாளி. இவர், தனது தங்கை காந்திமதிக்கு, மணப்பாறை வட்டம் செட்டிசத்திரம் கிராமத்தில் 1,200 சதுரஅடி காலி மனையை அண்மையில் வாங்கித் தந்தார்.

இந்த இடத்துக்கான பட்டா பெயர் மாற்றுவதற்கான விண்ணப்பம், ஆன்லைன் மூலம் சித்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பை கூடுதலாக கவனித்துவந்த சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவ.செல்வகுமாரின்(41) ஆய்வுக்குச் சென்றது.

அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு பரிந்துரை செய்ய ரூ.2,000 தர வேண்டுமென வையாபுரியிடம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம்கொடுக்க விரும்பாத வையாபுரி, திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவுபோலீஸில் புகார் அளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனையின்படி, நேற்று பிற்பகல் சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சிவ.செல்வகுமாரிடம் வையாபுரி ரூ.1,000 லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார். அதை அவர் வாங்கியபோது, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி உள்ளிட்டோர், விஏஓ சிவ.செல்வகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE