போலீஸாரின் ரோந்து வாகனம் கத்தி முனையில் பறிப்பு - ஆவடி அருகே முகமூடி நபர்கள் துணிகரம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: ஆவடி அருகே சரக்கு வாகனத்தை திருடி வந்த முகமூடி அணிந்த நபர்கள், ரோந்து போலீஸார் மடக்க முயன்ற போது போலீஸாரை கத்தி முனையில் மிரட்டி ரோந்து வாகனத்தை பறித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி டேங்க் பேக்டரி குற்றப் பிரிவு போலீஸார் இருவர், மீஞ்சூர் - வண்டலூர் 400 அடி சாலையில் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஆர்ச் அந்தோணியார் நகர் பகுதியில் சந்தேகத்துக் கிடமாக இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த போலீஸார் இருவரும் வாகனத்தை வழி மடக்கிய போது, ஓட்டுநர் போலீஸாரை பார்த்து நிற்காமல், அங்கிருந்து வாகனத்தை வேகமாக ஓட்டிக் கொண்டு தப்பிச் சென்றார். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த போலீஸார் இருவரும் சரக்கு வாகனத்தை எதிர் திசையில் வந்து வழி மடக்கியுள்ளனர்.

அந்த நேரத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க சரக்கு வாகனத்தை வேகத் தடைகள் மீது வேகமாக ஏற்றி இறக்கிய போது, வாகனம் பழுதாகி நின்றது. இதன் பிறகு போலீஸார் இருவரும் இரு சக்கர வாகனத்தை சாவியுடன் நிறுத்தி விட்டு, சரக்கு வாகனத்தில் இருந்த இருவரை பிடிக்க முயன்ற போது, முகமூடி அணிந்திருந்த அவர்கள் தங்களிடம் இருந்த பட்டாகத்திகளை எடுத்துக் ரோந்துப் போலீஸாரை வெட்டப் பாய்ந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் பின்னோக்கிச் சென்றபோது அவர்களின் ரோந்து வாகனத்தையே எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். இது குறித்து போலீஸார் காவல் நிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற போலீஸாரின் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் கைபேசி ஒன்று இருந்தது.

காவல் அதிகாரிகள் கைபேசி டவர் மூலம் இரு சக்கர வாகனம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். அந்த மோட்டார் சைக்கிள் செங்குன்றம் அருகே சோழவரம் பகுதியில் நல்லூர் சுடுகாட்டில் ஆளில்லாமல் நிறுத்தப்பட்டு கிடந்தது. பின்னர் காவல் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, போலீஸாரின் இரு சக்கர வாகனத்தை மீட்டு ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.மேலும், போலீஸார் முக மூடி அணிந்த நபர்கள் விட்டு சென்ற சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சரக்கு வாகனத்தையும் இந்த முக மூடி அணிந்த நபர்கள் திருடிக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனை மடக்கும் போது தான் இவர்கள் ரோந்துப் போலீஸாரை கத்தி முனையில் மிரட்டி ரோந்து வாகனத்தை பறித்துச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE