வண்டலூர் | நாட்டு வெடிகுண்டு வீசி திமுக ஒன்றிய செயலர் கொலை: சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

By செய்திப்பிரிவு

வண்டலூர்: வண்டலூரில் காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஆயுதங்களால் வெட்டி கொலைசெய்த வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த, 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ரவுடிகளை போலீஸாரிடம் காட்டிகொடுத்ததால் கொலை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர், ஆராமுதன் (55). இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், கல்லூரி பயிலும் மதேஷ் என்ற மகனும், 9-ம் வகுப்பு பயிலும் நேத்ரா என்ற மகளும் உள்ளனர். இவர் திமுக., காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.

அதே போல் வண்டலூர் ஊராட்சி மன்றமுன்னாள் தலைவராகவும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவராகவும் இருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இவர் நேற்று முன்தினம், வண்டலூர் ரயில்வே மேம்பாலம் அருகில் படப்பை செல்லும் பிரதான சாலையில் காஞ்சிபுரம் எம்.பி. மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டிருந்த புதியபேருந்து நிறுத்தத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, தனது காரில் சென்றுள்ளார்.

அப்போது அதிவேகமாக, 1 பைக் மற்றும் 2 காரில் வந்தகும்பல் ஆராமுதன் வந்த காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தாக்கி உள்ளனர். மேலும், அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஆராமுதனை அந்த கும்பல் சுற்றி வளைத்து ஆயுதங்களால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்து இடது கை துண்டான நிலையில் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆராமுதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்துவண்டலூர் - ஒட்டேரிபோலீஸார், தாம்பரம் மாநகர காவல்ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடிவந்த நிலையில், நேற்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், ஓட்டேரியை சேர்ந்த முனீஸ்வரன்(22), மண்ணிவாக்கத்தை சேர்ந்த சத்தியசீலன் (20), அவினாசியை சேர்ந்த, சம்பத்குமார்( 20), மணிகண்டன் (23), திண்டுக்கல்லை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான், இந்தக் கொலைக்கான முழு விவரம் தெரிய வரும்.

அமைச்சர் அஞ்சலி: இந்நிலையில், உயிரிழந்த ஆராமுதன் உடலுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுகவினர் பலர் அஞ்சலி செலுத்தினர். மாவட்டத்தின் பல இடங்களில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்படவில்லை.

போதை பொருள் விற்பனை: ஆராமுதன் வண்டலூர் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினருக்கு அடிக்கடி தகவல் தெரிவித்து வந்ததாலும், இதில் பாதிக்கப்பட்ட ரவுடிகள் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வண்டலூர் ஊராட்சி துணைதலைவர் கவிதா சத்திய நாராயணன் என்பவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்தது. அதில்தொடர்புடைய ரவுடிகளை கைதுசெய்ய ஆராமுதன் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதில் தொடர்புடைய ரவுடிகள் கூட்டு சேர்ந்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: நிலம் வாங்குவது, விற்பனை செய்வது போன்ற காரணங்களால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடை ஒதுக்குவதில் நடந்த பண பேரங்கள் மற்றும் கட்சியில் பதவி வாங்க விரும்பிய சிலருடன் நடந்த பரிவர்த்தனைகள் பின்னணியில் கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

திமுகவினர் குற்றச்சாட்டு: ஆராமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரின் ஆதரவாளர்கள் கூறியது: மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இவரின் செயல்பாடு காரணமாகவே கட்சியில் ஒன்றிய செயலாளர் பதவியும், உள்ளாட்சியில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் பதவி வழங்கப்பட்டது.

கட்சி சொல்லும் அனைத்து பணிகளையும் திறம்பட செய்து வந்தவர் ஆராமுதன். சமீபத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்து விட்டது என அல்வா கொடுக்கும் போராட்டத்தையும் மேற்கொண்டார். இது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

வண்டலூர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் குறித்து அவ்வப்போது காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, அவர் குற்றங்களை தடுத்து வந்தார். இதன் காரணமாகவே பாதிக்கப்பட்டவர்கள் கூட்டு சேர்ந்து அவரை கொலை செய்திருக்காலம் என சந்தேகம் உள்ளது. ஆராமுதனை போலீஸாரே ரவுடிகளிடம் காட்டிகொடுத்துள்ளனர் என்று ஆராமுதனின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

நாட்டு வெடிகுண்டு விற்பனை: ஆராமுதனை கொலை செய்தது போல் வண்டலூரில் ஏற்கெனவே திமுக பிரமுகர் விஜயராஜ், அதிமுக கவுன்சிலர் அன்பரசு, ஊரப்பாக்கம் திமுகவை சேர்ந்த ஜி.என்.ஆர்.குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கூடுவாஞ்சேரியில் நாட்டு வெடிகுண்டு பரவலாக விற்பனை செய்யப்படுவதாக பேசப்படுகிறது. இது போலீஸாருக்கு தெரிந்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE