படகில் வந்த பாகிஸ்தானியர்கள் 5 பேர் கைது: குஜராத்தில் 3,300 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத்தில் 3,300 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

கடல்வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் அடிக்கடி ரோந்து பணியில்ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்அண்மையில் குஜராத் எல்லையில்போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து நேற்று முன்தினம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிறிய வகை கப்பல், குஜராத் எல்லையில் செல்வதை கடற்படையினர் கண்டறிந்தனர். உடனடியாக அந்த சிறிய வகை கப்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

அப்போது அந்தக் கப்பலில் சுமார் 3,300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கப்பலில் இருந்த ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.2,000 கோடி மதிப்பு: இதன் சர்வதேச சந்தை மதிப்புரூ.2,000 கோடிக்கும் அதிகமாகஇருக்கும் என கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 3,089 கிலோ கஞ்சா, 158 கிலோமெத்தாம்பெட்டமைன் மற்றும் 25கிலோ மார்பின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் இருந்துள்ளன. அந்தப் பைகளில் பாகிஸ்தான் தயாரிப்பு என எழுதப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் புனே, டெல்லியில் நடைபெற்ற மிகப்பெரிய சோதனையில் 2,500 கோடி ரூபாய் அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் அமித் ஷா கூறும்போது, “போதைப் பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவதில் உறுதிப் பூண்டுள்ளநம்முடைய அரசின் உறுதிப்பாட்டுக்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நேரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை, கடற்படை, குஜராத் காவல்துறைக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE