பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது தப்ப முயன்ற பெண் கார் மோதி உயிரிழப்பு: இளைஞரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸார் @ திண்டிவனம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது தப்பியோடிய பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை போலீஸார் சுட்டு பிடித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இரு போலீஸார் உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, மாதவரம், திருமலை நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (21). கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பவித்ரா (20). இவர், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி, துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 23-ம் தேதி இரவு திருவண்ணாமலை செல்ல சென்னையில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் என்ற இடத்துக்கு 24-ம் தேதி அதிகாலை வந்த போது, பின்னால் பைக்கில் வந்த இருவர் ரமேஷ் மற்றும் பவித்ராவிடம் வழிபறி செய்துவிட்டு முன்னோக்கி சென்று, சற்று தூரத்தில் காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியை கடந்த ரமேஷை தாக்கிவிட்டு, பவித்ராவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது பவித்ரா தப்பி தேசிய நெடுஞ்சாலையில் ஓடியுள்ளார். அப்போது சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த கொடிக்கம்பம் பவித்ராவின் முகத்தை கிழித்ததில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், ஒலக்கூர் காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கண்காணித்து விபத்தை ஏற்படுத்திய சென்னை முடிச்சூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை பிடித்து, விசாரணை நடத்தி காரை பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து 25-ம் தேதி மாலை பிரேத பரிசோதனைக்கு பின், பவித்ராவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இச்சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நெல்லை மாவட்டம், கொள்ளியங்குளம் பகுதியைச் சேர்ந்த உதயபிரகாஷ் (35), பணகுடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவத்தின் போது, பவித்ராவிடமிருந்து பறித்த செல்போனை விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் உள்ள புதர் ஒன்றில் மறைத்து வைத்திருப்பதாக உதயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரை நேற்று ஒலக்கூர் உதவி ஆய்வாளர் மகாலிங்கம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன், தலைமை காவலர் தீபக் குமார் ஆகியோர் அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

புதரில் மறைத்து வைத்த செல்போனை காட்டிக் கொண்டிருந்த போதே, அதனுடன் சேர்த்து பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன், தலைமை காவலர் தீபக் குமார் ஆகியோரின் வலது புஜத்தில் உதயபிரகாஷ் வெட்டியுள்ளார்.

இதைக்கண்ட மற்றொரு உதவி ஆய்வாளர் மகாலிங்கம் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்துள்ளார். ஆனால் உதயபிரகாஷ் தப்பியோட முயற்சிக்க, அவரை முழங்காலுக்கு கீழே சுட்டு பிடித்து கைது செய்தார்.

இதையடுத்து உதயபிரகாஷ் மற்றும் காயமடைந்த போலீஸார் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த போலீஸாரிடம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாட்ச் நலம் விசாரித்து, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

சுட்டுப்பிடிக்கப்பட்ட உதயபிரகாஷ் மீது நெல்லை மாவட்டம், ராதாபுரம் காவல்நிலையத்தில் கொலை வழக்கு ஒன்றும், வழிப்பறி வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

உடன் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய சிறுவன் வழிப்பறி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நெல்லையில் நீதிமன்றத்துக்கு கொண்டு வரும் போது, அதே நாளில் தன் மீதுள்ள வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்த உதயபிரகாஷுக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் நண்பர்களாகி, இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE