இருதரப்பு மீனவர்களிடையே நடுக்கடலில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு; 7 பேர் கைது @ நாகை

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், அதேபகுதியைச் சேர்ந்த ஆத்மநாதன் (33), அவரது சகோதரர்கள் சிவநேசசெல்வம்(23), காலத்திநாதன் (22) ஆகியோர் நேற்று முன்தினம் நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த பாலகுமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 8 பேர், மீன் பிடிக்கச் சென்றபோது, பைபர் படகின் வலை சேதமானதாகக் கூறப்படுகிறது.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, பைபர் படகின் மீது விசைப்படகை மோதியதோடு, ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலத்திநாதன் ஆகியோரை கீச்சாங்குப்பம் மீனவர்கள் தாக்கிய தாகக் கூறப்படுகிறது.

இதில், சிவநேசசெல்வம் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். தொடர்ந்து, பைபர் படகு கவிழ்ந்ததில் காலத்திநாதன், ஆத்மநாதன் ஆகியோர் கடலில் மூழ்கினர். இதில் படுகாயங்களுடன் நீரில் தத்தளித்த ஆத்மநாதனை, அவ்வழியே வந்த மீனவர்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அக்கரைப்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் விசைப்படகில் சம்பவ இடத்துக்குச் சென்று சிவநேசசெல்வத்தின் உடலைக் கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். மாயமான காலத்திநாதனை, கடலோர காவல் குழும போலீஸாரின் உதவியுடன் மீனவர்கள் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அக்கரைப் பேட்டை மீனவர்களைத் தாக்கிய கீச்சாங்குப்பம் மீனவர்கள் ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டபாணி ஆகிய 7 பேரை நாகை கடலோர காவல் நிலைய போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர். தலைமறைவான விசைப்படகு உரிமையாளர் பாலகுமாரைத் தேடி வருகின்றனர்.

மேலும், அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் மீனவ கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE