தேவகோட்டை அருகே இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை சுட்டுபிடித்த போலீஸ்

By செய்திப்பிரிவு

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீஸார் காலில் சுட்டு பிடித்தனர்.

காளையார்கோவில் அருகே கல்லுவழியைச் சேர்ந்தவர் ஜேக்கப்பாரி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜன.26-ம் தேதி அதிகாலை அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி, மகன், மகள், தந்தை, தாயார் ஆகிய 5 பேரையும் ஒருகும்பல் கொடூரமாகத் தாக்கி கொள்ளையடித்தது.

இதுதொடர்பாக காளையார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்தனர். மாவட்ட எஸ்பி அரவிந்த் உத்தரவின்பேரில் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். எனினும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர் நடமாட்டம் பதிவாகவில்லை.

அதேபோல, அவர்கள் செல்போன் போன்ற நவீன சாதனங்களை யும் பயன்படுத்தவில்லை. விரல்ரேகை, அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், வாகனங்கள் என எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இதனிடையே குற்றவாளிகளை பிடிக்காததைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து விசாரணை அதிகாரியான காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தேவகோட்டைக்கு மாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேலு நியமிக்கப்பட்டார்.

தனிப்படை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு, அதில் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தபோலீஸாரும் கூடுதலாக நியமிக் கப்பட்டனர்.

இந்நிலையில், தேவகோட்டை தென்னீர்வயலைச் சேர்ந்த தினேஷ்குமார் (34) என்பவரை பிடித்து தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

இதற்கிடையே அவர் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இரும்பு ராடை எடுப்பதற்காக இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படையினர் தேவகோட்டை அருகேயுள்ள முத்தூரணிக்கு அழைத்து வந்தனர்.

தினேஷ்குமார் இரும்பு ராடை எடுத்ததும், எஸ்ஐ சித்திரைவேல், தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார்.

இதையடுத்து அருகில் இருந்த போலீஸார் அவரை காலில் சுட்டு பிடித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE