‘பிரேக்கிங் பேட்’ பாணியில் சம்பவம்: போதைப் பொருள் கடத்தல் கும்பல் டெல்லியில் கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘பிரேக்கிங் பேட்’ வெப் தொடர் பாணியில் போதைப் பொருட்களை கடத்தியதன் மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.2000 கோடி வரை சுருட்டிய கும்பலை போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர்.

கடந்த 2008 முதல் 2013 முதல் ஒளிபரப்பான டிவி தொடர் ‘பிரேக்கிங் பேட்’. உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற இத்தொடரில் மெத் (Methamphetamine) எனப்படும் போதைப்பொருளைப் பற்றி விரிவாக காட்டப்பட்டிருக்கும். தற்போது அந்த போதைப்பொருளை கடத்தி அதன் மூலம் பெரும் தொகை ஈட்டிய ஒரு கும்பல் டெல்லியில் சிக்கியுள்ளது.

மெத் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருளான சூடோபெட்ரைன் (pseudoephedrine), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அந்த நாடுகளைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து, இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

மெத் அல்லது கிறிஸ்டல் மெத் என்ற அந்த போதைப் பொருளுக்கு உலகளவில் கடுமையான டிமாண்ட் நிலவுவதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அவை ஒரு கிலோ ரூ.1.5 கோடிக்கு விற்கப்படுவதாகவும் தெரிகிறது.

இது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “டெல்லியில் இருந்து போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பபடுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. நான்கு மாத தீவிர விசாரணை மற்றும் கள ஆய்வுக்குப் பிறகு, இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல், டெல்லியில் இருப்பதும், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்த முயற்சித்து வருவதும் தெரியவந்தது” என்றனர்.

விசாரணையில் இந்த கும்பல், மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து செயல்பட்டு வருவதை தெரிந்து கொண்ட போலீசார் அங்கு சென்றனர். அதிரடியாய் குடோனுக்குள் நுழைந்த அவர்கள், ஹெல்த் மிக்ஸ் பவுடருடன் சூடோபெட்ரைன் வேதிப் பொருளை கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அவர்கள் அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. சுமார் 3,500 கிலோ சூடோபெட்ரைன் வேதிப் பொருளை கடத்தியதன் மூலம் சுமார் ரூ.2000 கோடி வரை இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர்தான் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும், தற்போது அவர் தலைமறைவாகியிருப்பதாகவும், அவரை பிடிக்க தீவிர முயற்சிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர் யார் என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE