ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு: செம்பியம் தலைமை காவலர் பணி நீக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் செம்பியம் காவல் நிலையதலைமைக் காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில்கூறியதாவது: செம்பியம் காவல்நிலைய குற்றப் பிரிவில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார்.

இவர் 2020 மே மாதம் வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது கரோனா தொடர்பான ரோந்து பணியில் இருந்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பணியை செய்யாமல், பாதியிலேயே சென்றுள்ளார்.

அதே ஆண்டு ஜூன் மாதம் பணியிலிருந்தபோது இளம்பெண் ஒருவரது செல்போன் எண் மற்றும் முகவரியை கட்டாயப்படுத்தி வாங்கியதோடு, நள்ளிரவில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்று முறை தவறி நடந்துள்ளார்.

இதேபோல, ஏற்கெனவே திருமணமான இவர், வேறு ஒருவரது மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார். மேலும், அவர் வசித்து வந்த குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவரிடம் முறையற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தலைமைக் காவலர் செந்தில்குமார் மீதுவிசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து அவரை பணிநீக்கம் செய்து புளியந்தோப்பு துணைஆணையர் ஈஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE