புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக அவதூறு வீடியோ - சென்னை போலீஸ் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசப் பட்டதில் ஒருவர் இறந்து விட்டதாக அவதூறு பரப்பப்பட்ட விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் சென்னையில் ஓடும் ரயிலிலிருந்து சமூக விரோதிகளால் தூக்கி வெளியே வீசப்பட்டதாகவும், இதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிஹாரில் இயங்கி வரும் செய்திச் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. அவர்களது ‘எக்ஸ்’ பக்கம் மற்றும் யூடியூப் சேனலிலும் இதைப் பதிவு செய்திருந்தது. மேலும், அவர்கள் வெளியிட்ட 48 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், இறந்த நபரின் உடல் அடங்கிய சவப்பெட்டி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மறுப்பு தெரிவித்து செய்திக் குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், ``இந்த செய்தி முற்றிலும் தவறானது. இது போன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்றோ, ஒற்றுமையைச் சீர் குலைக்கும் நோக்கத்துடனோ பரப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் எதுவும் சென்னை பெருநகர காவல் எல்லையில் நடக்கவில்லை.

சம்பந்தப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பான விசாரணையில், கடந்த 6-ம் தேதி பிஹார் மாநிலம், கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் மஹ்தோ கிராம் துர்காலியா என்பவர் விழுப்புரத்திலிருந்து தாம்பரத்துக்குச் செல்லும் ரயிலில் பிளாட்ஃபார்ம் எண். 2-ல் இருந்து ரயிலின் மேலே ஏறியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்ட காவல் துறை அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து, பிஹார் மாநிலம் பாட்னா வரை தடையில்லா சான்று வழங்கியுள்ளது. எனவே, உண்மைக்கு மாறான தகவலைப் பரப்பிய செய்தி சேனல் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்யவுள்ளனர். அவதூறு தகவல்களைக் காணொலி, சமூக வலைதளங்களில் வெளியிடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE