குழந்தைகள் கடத்தப்படுவது போல பொய்யான வீடியோக்களை பரப்பினால் நடவடிக்கை: சென்னை போலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: குழந்தைகள் கடத்தப்படுவதுபோல சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவது போலவும், கடத்தப்படும் குழந்தைகளை கொலை செய்து, உடல் உறுப்புகளை திருடுவது போலவும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோக்கள் குறித்து சென்னை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த வீடியோக்கள் பொய்யானது என தெரிய வந்துள்ளது.

இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சமீபகாலமாக குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் இது போன்ற வீடியோக்கள் பரப்பப் பட்டு வருகின்றன என்பதை சென்னை காவல் துறை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறது.

இது போன்ற போலியான செய்திகளை கேட்டோ, வீடியோக்களை பார்த்தோ பொது மக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை. பொது மக்களுக்கு இது சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருந்தால் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 ஆகிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும், அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற பொய்யான செய்திகள், வீடியோக்களை பரப்புவோர் உடனடியாக அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE