சென்னை | வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் பிடிபட்டனர்: இலவசமாக பிரியாணி கேட்டு கடையை சூறையாடிய 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக சாலிகிராமத்தில் 3 பேரும், இலவச பிரியாணி கேட்டு கடையை சூறையாடிய தேனாம்பேட்டையில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சாலிகிராமம் தசரதபுரம் அருணாச்சலம் சாலை பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா (24). ஓட்டல் ஊழியரான இவர், கடந்த 15-ம் தேதி அதிகாலை வேலை முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

சாலிகிராமம் சத்யமூர்த்தி தெரு மற்றும் வீரமாமுனிவர் தெரு சந்திப்பு அருகே செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அப்துல்லாவை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்டதாக விருகம்பாக்கம் இளங்கோ நகரைச் சேர்ந்த ரஞ்சித் (19), கோயம்பேடு மேட்டுக் குப்பம் நவீன்குமார் (19) மற்றும் 17 வயதுடைய அவரது கூட்டாளி ஒருவர் என 3 பேரை கைது செய்தனர்.

ரஞ்சித் மீது ஏற்கனவே இருசக்கரவாகனங்கள் திருடியது தொடர்பாகதிருவேற்காடு மற்றும் கோயம்பேடு காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

பிரியாணி கடை சூறை: சென்னை தேனாம்பேட்டை நல்லான் தெருவில் வசித்து வரும் சதீஷ்குமார் (40), ஆழ்வார்பேட்டை தெருவில் பிரியாணி கடை வைத்துள்ளார். கடந்த 14-ம் தேதி இவரது கடைக்கு வந்த 2 பேர் இலவசமாக பிரியாணி கேட்டுள்ளனர். கொடுக்க மறுத்ததால் அவர்கள் பிரியாணி கடையை சூறையாடி உள்ளனர். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி கல்லாபெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து பிரியாணி கடையை சேதப்படுத்தியதாக வேளச்சேரி சுப்பிரமணியன் என்ற மணி (30), அவரது கூட்டாளி பெசன்ட் நகர் ரபீக் (34) ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்த விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE