ஆனைமலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொத்தனார் கைது - 56 பவுன் தங்கக் கட்டிகள் மீட்பு

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும் கோட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து, அவரிடமிருந்து 56 பவுன் தங்கம் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வால்பாறை காவல் நிலைய எல்லைப் பகுதிகளுக்கு உட்பட்ட ஆனைமலை மற்றும் கோட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகள் மற்றும் கடைகளில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறின. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி தலைமையில் 2 தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 200 கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான நபரை பிடித்து, போலீஸார் விசாரித்தனர்.

அந்நபர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ( 38 ) என்பதும், ஆனைமலை மற்றும் கோட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆறு இடங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும், திருடிய நகைகளை உருக்கி, தங்கக் கட்டியாக மாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 56 பவுன் தங்கம், திருட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கோவை மத்திய சிறையில் ராமச்சந்திரன் அடைக்கப்பட்டார். குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு ரொக்கப் பரிசு வழங்கி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொடர் திருட்டு வழக்கில் கைதான ராமச்சந்திரன், மதுரையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 15 வழக்குகள் உள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் அடிக்கடி இவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால், மதுரையில் இருந்து பொள்ளாச்சி வந்து கோட்டூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

இங்கு, கொத்தனார் வேலை செய்த படியே, திருட்டுச் சம்பவத்திலும் ஈடுபட்டு வந்தார். பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அருகே உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் அறிமுகம் இல்லாத நபர்களின் நடமாட்டம் அடிக்கடி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE