‘ரூ.125 கோடி வசூலித்து மோசடி’ - 'நியோ மேக்ஸ்' விருதுநகர் பகுதி முகவர் கைது 

By என்.சன்னாசி

மதுரை: 'நியோ மேக்ஸ்' துணை நிறுவனம் பெயரில் ரூ.125 கோடி வரை முதலீடு வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் பகுதி முகவர் கைது செய்யப்பட்டார்.

'நியோ-மேக்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், பல்வேறு ஊர்களில் கிளைகளை ஏற்படுத்தி, இதன் மூலம் கூடுதல் வட்டி, டெபாசிட்டிற்கு இரட்டிப்புத் தொகை வழங்குவதாக மதுரை உட்பட பல்வேறு ஊர்களில் ஏராளமானோரிடம் முதலீடுகளை பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மதுரை கமலக் கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி மற்றும் நிறுவனங்களின் இயக்குநர்கள், முகவர்கள் என, சுமார் 90-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 18-க்கும் மேற்பட்டோரை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்பு டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் சிக்கியவர்களை தொடர்ந்து தேடுகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் 'நியோ- மேக்ஸி'ன் துணை நிறுவனமான குளோமேக்ஸ் என்ற நிறுவனம் மூலம் மதுரை உட்பட பல்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 600 பேரிடம் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்த முகவர் விருதுநகரைச் சேர்ந்த தியாகராஜன் (36) என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது தெரிந்தது. அவருக்கு எதிராக 5-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்து, தனிப்படையினர் அவரை தேடினர்.

இதனிடையே, தியாகராஜனை விருதுநகர் அருகே வைத்து கைது செய்தனர். டிஎஸ்பி மணிஷா கூறுகையில், ''பொதுவாக மக்கள் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பக்கூடாது. நியோமேக்ஸ் வழக்கில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கைது செய்கிறோம். தலைமறைவானவர் களை தேடுகிறோம். கூடுதல் வட்டி கொடுப்பதாக அறிவிக்கும் நிதிநிறுவனங்கள், முகவர்கள் மீது எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் மக்கள் இருக்க வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE