கொட்டாங்குச்சியில் தேநீர்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாமியார், மருமகள் கைது @ அரூர்

By எஸ்.செந்தில்

அரூர்: அரூர் அருகே கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாமியார், மருமகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்துக்கு உட்பட்ட போளையம்பள்ளி கிராமத்தில் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த செல்வி உள்ளிட்ட 4 பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேட்டபோது கோட்டாட்சியர் கூறியது: “அரூர் வட்டத்துக்கு உட்பட்ட போளையம்பள்ளி கிராமத்தில்,சரவணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் குத்தகை முறையில் கோபிநாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் மற்றும் ராஜலிங்கம் ஆகியோர் பயிர் செய்து வருகின்றனர்.

கடந்த 8-ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த, ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த செல்வி உள்ளிட்ட 4 பெண்கள் தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு புவனேஸ்வரன் குடும்பத்தைச் சேர்ந்த சின்னத்தாய் மற்றும் அவரது மருமகள் தரணி ஆகியோர் வீட்டில் தேநீர் வைத்து அதை தேங்காய் கொட்டாங்குச்சியில் ஊற்றி செல்வி உள்ளிட்ட 3 பேருக்கும் கொடுத்துள்ளனர். இது குறித்த வீடியே சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இது குறித்து கம்பைநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி சின்னத்தாய், தரணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து இப்பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் கண்காணிக்க அரூர் வட்டாட்சியருக்கும், வருவாய்த்துறையினருக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE