ஆவடி | `மணமகன் தேவை’ போலி விளம்பரம் மூலம் திருமணமாகாத இளைஞரிடம் ரூ.15 லட்சம் பறித்தவர் கைது

By செய்திப்பிரிவு

ஆவடி: அரியலூர் மாவட்டம் சாத்து மங்களத்தை பூர்வீகமாக கொண்ட கோபிராஜன், தற்போது அம்பத்தூரில் வசித்து வருகிறார். கேட்ரிங் டிப்ளமோ படித்துள்ள இவர், சமையல் பணி செய்து வருகிறார். கோபிராஜனுக்கு 33 வயதாகியும் திருமணம் செய்ய தகுந்த பெண் அமையவில்லை என கூறப்படுகிறது.

இதனால், பெற்றோரின் அறிவுரைப்படி நாளிதழ் ஒன்றில், மணமகள், மணமகன் தேவை விளம்பர பக்கத்தை தொடர்ந்து பார்த்து வந்த கோபிராஜன், ‘சிவாஸ்ரீ, என்ற தாய் - தந்தை அற்ற பெண்ணுக்கு மண மகன் தேவை என்ற விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.

தொடர்ந்து, கோபிராஜன், அந்த பெண் ஆதரவற்றவர் என்பதால் அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதை பயன்படுத்தி, கோபிராஜனிடம் இருந்து சிவாஸ்ரீ சுமார் ரூ.15 லட்சம் வரை பெற்றுள்ளார்.சந்தேகமடைந்த கோபிராஜன் ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணை செய்தனர்.

சிவாஸ்ரீ என்ற பெயரில் விளம்பரம் அளித்தவர் ஆவடி மோரையை சேர்ந்த ராஜசேகரன் மனைவி புவனேஷ்வரி (42). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமண தகவல் மையம் நடத்தி வந்த புவனேஸ்வரி, அதிக வயதாகியும் திருமணமாகாத ஆண்களை தனது வலையில் விழ வைத்து போன் மூலமாக பேசி ஏமாற்றி பணம் பறித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE