சென்னை | ரூ.3 கோடி தங்க, வைர நகை பறிமுதல்: தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த நேபாள கொள்ளையர்கள் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த நேபாள கொள்ளையர்களை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் பீச் பகுதியில் உள்ள பங்களாவில் வசித்து வருபவர் பிரஜேஷ்குமார். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளார். பணி நிமித்தமாக மனைவியுடன் ஜெர்மன் சென்றிருந்தார்.

இந்நிலையில், கடந்த 30-ம் தேதி இவரது வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளைபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர்.

கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார், நீலாங்கரை உதவிஆணையர் பாரத் மேற்பார்வையில் ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல்கட்டமாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் தனிப்படை போலீ ஸார் விசாரணை நடத்தினர்.

அதனடிப்படையில், தலைமறைவாக இருந்த நேபாளத்தை சேர்ந்த பிரகாஷ் கட்கா (30), அவரது கூட்டாளிகள் மனோஜ் மாசி (41), ஜனக் பிரசாத் ஜெய்ஷி (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள், கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகளுடன் டெல்லி சென்று அங்கிருந்து நேபாளம் தப்ப முயன்றபோது பிடிபட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ் கட்காதான் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார், இவர், கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் பகுதி நேர ஓட்டுநராக வேலை செய்து வந்ததும், தொழிலதிபர் வெளிநாடு சென்றதை அறிந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது. தலைமறை வாக உள்ள மேலும் ஒருவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE