நாங்குநேரி | ஒரே மாதத்தில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு: புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: தமிழகத்திலேயே முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தற்போது நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் தொழில் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளன.

திருநெல்வேலி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2,000-ம் ஆண்டில் நாங்குநேரி அருகே சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டது. இதற்காக 2,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

தொடக்கத்தில் இங்கு முழுக்க முழுக்க வெளிநாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூடிய 35 நிறுவனங்கள் செயல்பட்ட நிலையில், தற்போது 15 நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு போதிய பாதுகாப்பு அலுவலர் கள் இல்லாததால், இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நிறுவனங்களின் கதவுகளை உடைத்து ஜென ரேட்டர்களின் பேட்டரிகள், மின்விசிறிகள், லேப்டாப்கள், மின் மோட்டார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என, பல்வேறு பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

ஏ.எம்.ஆர்.எல் என்ற நிறுவனத்தின் நிர்வாக கட்டிடத்தில் பல இடங்களில் ஜன்னல்கள், கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடிச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1 மாதத்தில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

தொடர் திருட்டு குறித்து இங்கு தொழில் நடத்தும் நிறுவனங்களின் முதலீட்டாளர்களின் சங்கம் நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை .

பொருளாதார மண்டலத்தினுள் நிறுவனம் ஒன்றில்
இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல முதலீட்டாளர்களின் சங்கங்களின் தலைவர் வீரபாண்டியன் கூறும்போது, “நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை பராமரிக்கும் ஏ.எம்.ஆர்.எல் நிறுவனம் திவாலாகி விட்டதால், இப்போது எந்தவிதமான பராமரிப்பு பணியும் நடைபெறுவதில்லை. கடந்த ஒரு மாதமாக இங்கு திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. தொழில் முதலீட்டாளர் களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநர் ஜோசப் கூறும்போது, “சில மாதங்களாக அத்துமீறி ஆட்கள் நுழைந்து, ஷட்டர்களை உடைத்து பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். எங்களது நிறுவனத்தில் கைரேகை நிபுணர்கள் வந்து சோதனை செய்தபோது, சிறுவர்களின் கால்தடம் பதிந்துள்ளதாக தெரிவித்தனர். கண்காணிப்பு கேமராக்கள் நிறுவி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்றார்.

சிறப்பு பொருளாதார மண்டல நுழைவு வாயிலில் காவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் கிடையாது . இதனால் பல்வேறு சமூக விரோத செயல்கள் இங்கு நடப்பதாக தெரிகிறது. திருட்டு சம்பவங்களை தடுக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு பணியாற்றும் பணியாளர்களின் கோரிக்கை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE