ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்காக திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் நேற்று ஆஜரானார். வழக்கு விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவு காவல் நிலையங்களில் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இவ்விவகாரத்தில் அப்போதைய அம்பா சமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், காவல் ஆய்வாளர் ராஜ குமாரி உள்ளிட்ட 14 காவல் துறை அலுவலர்கள் மீது குற்ற முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீஸாரால் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்குமுன் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், திருநெல்வேலி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் உள்ளிட்ட 12 பேர் முதலாவது நீதித் துறை நடுவர் முன்பு நேற்று ஆஜராயினர். குற்றம் சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர் ஆபிரகாம் ஜோசப் ஆகியோர் ஆஜராகவில்லை. பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதித்துறை நடுவர் ஆறுமுகம் உத்தரவிட்டார்.

பல்வீர் சிங்கின் வழக்கறிஞர் துரை ராஜ் கூறும் போது, “பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது, சட்டப் படி சரியானது. புகார் கொடுத்த அனைவருமே விசாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது . எனவே, புகார்தாரர்களை மிரட்டுவதற்கான வாய்ப்பு கிடையாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற 13 காவல்துறை அலுவலர்களும் இதுவரை பணியில் தான் இருந்து வருகின்றனர் ” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE