காஞ்சிபுரம் திருநங்கை கொலை வழக்கு: 2 போலீஸ் அதிகாரிகளை குற்றவாளிகளுடன் சேர்த்து விசாரிக்க நீதிபதி உத்தரவு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 18 வயதுக்கு உட்பட்ட திருநங்கை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சரிவர விசாரணை நடத்தாத போலீஸ் அதிகாரிகளை குற்றவாளி பட்டியலில் சேர்த்து விசாரிக்கவும், இந்த வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியும் காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், சத்தியா, பாலு, விஜய், செல்வகுமார் ஆகியோர் கடந்த2017-ம் ஆண்டு 18 வயதுக்கு உட்பட்ட ஒருதிருநங்கையை தனியே அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கிக் கொடுத்து இவர்களுக்கும் குடித்துள்ளனர். அந்த திருநங்கையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவரை கொலை செய்தனர்.

இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ப.உ.செம்மல் விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவர். மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கு வெறும் கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. போக்சோ பிரிவின் கீழோ, தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழோ பதிவு செய்யப்படவில்லை.

எனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளைச் சேர்த்து போக்சோ நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கை சரிவர கையாளாத ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்த டி.நடராஜனை 7-வது குற்றவாளியாகவும், மற்றொரு காவல் ஆய்வாளராக இருந்த ஜெ.விநாயகத்தை 8-வது குற்றவாளியாகவும் சேர்த்து விசாரிக்கவும், அவர்கள் இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார்.

இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் கூறும்போது போக்சோ சட்டப்பிரிவில் சரிவர ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் இருந்தாலோ மறைத்தாலோ அது தொடர்பான அதிகாரிகளைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க இடம் உள்ளது என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE