போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கு: குமரி திமுக நிர்வாகி சரண்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: பாதிரியார் இல்லத்தில் நடந்த கொலை சம்பவத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு, நாகை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில், கடந்த 20-ம் தேதிஅதே ஊரைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர்குமார் கொலை செய்யப்பட்டார். இவர் தக்கலை ஒன்றிய நாம்தமிழர் கட்சி தலைவராகவும் இருந்தார்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக தக்கலை திமுக ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இவர்களை கைது செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக பாதிரியார் ராபின்சன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கொலை நடந்து 10 நாட்களான நிலையில் இவ்வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நேற்று காலை சரணடைந்தார். ரமேஷ்பாபுவை திமுகவில் இருந்து நீக்கி கட்சி தலைமை ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 10 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE