கொலை செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டாபோட்டி: மதுரை திமுக நிர்வாகி கொலை விசாரணையில் தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் முன்பகையால் கொலை செய்வதில் யார் முந்துவது? என்ற போட்டியில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியிலுள்ள எம்கே.புரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன்(45). இவர் 78-வதுவார்டு திமுக வட்டச் செயலாளராக இருந்தார். இவரது உறவினர் ராஜா என்ற கண்ணன். இவர்களுக்கும்,அப்பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருக்கும் இடையே இடம் வாங்கியதில் பிரச்சினை ஏற்பட்டது. இதில், சக்கரவர்த்தி 2009-ல் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையில் கண்ணனும், திருமுருகனும் கைது செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமுருகன் 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கண்ணன், அவரது மாமனார் தவக்குமார், பிரகாஷ், கண்மாய் பாண்டி ஆகியோரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் கைது செய்தனர். இக்கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

சக்கரவர்த்தி கொலையில் திருமுருகனும், கண்ணனும் சிக்கியதில் அவர்களுக்குள் பகை ஏற்பட்டது. இதற்கிடையே, கண்ணனின் மைத்துனிக்கு அண்மையில் நடந்த திருமணத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் போலீஸார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.இதற்கு திருமுருகன் தான் காரணம் என கண்ணன் தரப்பில் நினைத்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திருமுருகனை, கண்ணன் தரப்பு கொல்ல திட்டமிடுவதாகவும், கண்ணனை திருமுருகன் தரப்பினர் கொல்ல முயற்சிப்பதாகவும் இரு தரப்பினரிடமும் மாறி, மாறி கண்மாய் பாண்டி என்பவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதை மனதில் வைத்து, யார் முந்துவது என்ற போட்டியில் திருமுருகன் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையில் 8 பேருக்கு தொடர்புள்ளது. 4 பேரை கைது செய்துள்ளோம். மற்றவர்களைத் தேடி வருகிறோம்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE