கொள்ளையர் அச்சத்தால் வீடுகளிலேயே முடங்கிய கிராம மக்கள் @ காளையார்கோவில்

By செய்திப்பிரிவு

சிவகங்கை: காளையார்கோவில் அருகே கொள்ளையர் அச்சத்தால் பகலிலேயே வீடுகளில் கிராம மக்கள் முடங்கினர். கொள்ளையர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழியில் ஜன.26-ம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு முகமூடி கும்பல் நகைகளை கொள்ளையடித்து தப்பியது. காளையார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்தனர். எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கல்லுவழி கிராமத்தில் சாலையொட்டி உள்ள தேவாலயத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

அதேபோல் அங்குள்ள காப்பகம், தொண்டி சாலையில் உள்ள பேக்கரியிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் கொள்ளையர்கள் நடமாட்டம் பதிவாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் சம்பவம் நடந்த வீட்டின் பின்புறமுள்ள ஒத்தையடிப் பாதை அல்லது பள்ளி அருகேயுள்ள கண்மாய் பாதையைப் பயன் படுத்தி இருக்கலாம் எனக் கூறப் படுகிறது. அவர்கள் மொபைல்போன்களையும் பயன்படுத்த வில்லை. இக்கிராமத்துக்கு அருகேயுள்ள முடுக்கூரணி, கண்ணங்கோட்டையிலும் இதே போல் கொடூரமாகத் தாக்கி தலா 2 பேரை கொலை செய்து கொள்ளைகள் நடந்தன. தொடர் கொள்ளையால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொள்ளையர்கள் அச்சத்தால் வெளியே நடமாடாமல் பகலிலேயே வீடுகளை பூட்டிக் கொண்டு முடங்கினர். பல்வேறு பணிகளுக்காக வெளியூர் செல்வோர் மாலை 6 மணிக்குள் வீடு திரும்பி விடுகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தினருடன் சேர்ந்து இன்று காலை காளையார்கோவிலில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து கல்லுவழியைச் சேர்ந்த ஆபிரகாம் கூறுகையில், ‘‘கொள்ளை நடந்ததில் இருந்து வீட்டை விட்டு வெளியேறவே அச்சமாக உள்ளது. இதனால் விவசாயப் பணிகள், கடை களுக்குக் கூட செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளோம். தொடர்ந்து எங்கள் பகுதியிலேயே கொடூரமாகத் தாக்கி கொள்ளை நடந்து வருகிறது. இதனால் போலீஸார் விரைந்து குற்றவாளி களை கைது செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE