தேவாலய வளாகத்தில் கொலை | திருச்செந்தூர் நீதிமன்றத்தில் பாதிரியார் சரண்: திமுக ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியாரின் இல்லத்தில் கடந்த 20-ம் தேதி, அதே ஊரைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சேவியர் குமார்(45) கொலைசெய்யப்பட்டார்.

இது தொடர்பாக தக்கலை திமுக ஒன்றியச் செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களைத் தேடி வந்தனர். பின்னர், ஜஸ்டின்ரோக், வின்சென்ட் ஆகிய இருவர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.

முக்கியக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை (ஜன. 26) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சேவியர் குமாரின் உடலை மைலோடு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக நேற்று வருவாய்த் துறையினர் மற்றும் சேவியர் குமாரின் குடும்பத்தினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால், சேவியர் குமாரின் உடலை தங்களது சொந்தநிலத்தில் அடக்கம் செய்யப்போவதாக உறவினர்கள் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுபடி, கல்லறைத் தோட்டத்தில் மட்டுமே அடக்கம் செய்ய அனுமதிக்க முடியும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே, சேவியர் குமாரின் உடல் மைலோடு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான மைலோடு பாதிரியார் ராபின்சன், அவர் வகித்து வந்த மறைமாவட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் நேற்று காலை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும், இந்த வழக்கில் முதல்குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திமுக தக்கலை ஒன்றியச் செயலாளர் ரமேஷ் பாபு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அவர் வகித்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE