ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் டிஜிட்டல் பேமெண்ட் மோசடிகள் @ விழுப்புரம்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: ஒரு டீ குடிப்பதற்கு கூட, ‘டிஜிட்டல் பேமெண்ட்’ செய்வது தற்போது சகஜமாகி விட்டது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஈடாக சைபர் க்ரைம் செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக ஆன்லைன் வழியே பண மோசடி அதிகரித்து வருகிறது.

அண்மையில், தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.69 லட்சம் மோசடி நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் பண ஆசைக்காட்டி ஆன்லைனில் நடைபெறும் மோசடிக்கு எல்லையே இல்லை. பெரும்பாலும் பரிசு விழுந்ததாகக் கூறி அதை அனுப்ப ஜிஎஸ்டி தொகையை கட்டுமாறு கூறி ஏமாற்றுகின்றனர். புதுச்சேரியில் வாரந்தோறும் ஆன்லைன் மூலம் ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலும் இந்த பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டபோது, “ஆன்லைன் ஆப் மூலம், ‘நீங்கள் எதிர்பார்த்த வேலையைத் தருகி றோம்; இதில் முதலீடு செய்தால் உங்களுக்கு இரண்டு மடங்காக பணம் கிடைக்கும்; ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும்; கிரிப்டோ கரன்ஸி வாங்கினால் கொள்ளை லாபம்; டாஸ்க் முடித்தால் ஏகப்பட்ட பணம்; பிட் காயினில் அருமையான வருமானம்’ என்று கூறி வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்.

வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் கிரிப்டோ கரன்ஸி முதலீடு தொடர்பாக மர்ம நபர்கள் அதிகளவில் ‘மெசேஜ்’ அனுப்பி வருவதால், உங்களது வங்கிக் கணக்கு எண், ரகசிய எண் ஆகியவற்றை கேட்பவர்களிடம் இது குறித்து தெரிவிக்க கூடாது. இதன் வாயிலாக பண மோசடி செய்யப்படும். எனவே இதில் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும். கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு, நடப்பு சந்தை மதிப்பை விட பிட்காயினை குறைந்த விலையில் பெறலாம் என்று ஏமாற்றப்படுகின்றனர். இவ்வாறு வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்பு கொண்ட மொபைல் எண், பணப் பரிமாற்றம் நடந்த வங்கிக்கணக்குகள் போன்றவற்றை வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. பிட் காயின், கிரிப்டோ கரன்ஸி போன்றவை இந்தியாவில் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தகம் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றிய விவரங்களை வெளியிடும்போது அதனை வைத்து கிராமப்புறங்களில் சற்று வசதியாக உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் ஹேக்கர்ஸ்களுக்கு தெரிகிறது.

இவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று மிகவும் நுணுக்கமாக அறிந்து கொண்டு ஆசைவார்த்தை காட்டி மோசடி செய்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 916 அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக பெறப்பட்ட புகாரின் பேரில் ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 305 என்ற அளவில் பணம் முடக்கப்பட்டது. இதில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 813 மீட்கப்பட்டு புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு ரூ.2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 661 மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் ரூ.1கோடியே 46 லட்சத்து 68 ஆயிரத்து 038 என்ற அளவில் பணம் முடக்கப்பட்டது. இதில் ரூ.20 லட்சத்து 6 ஆயிரத்து 013 அளவில் பணம் மீட்கப்பட்டு, புகார்தாரரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ரூ.4 கோடியே 82 லட்சத்து 30 ஆயிரத்து 197 என்ற அளவில் ரொக்கம் முடக்கப்பட்டது.

இதில் ரூ.18,03,022 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கின்றனர். ஆண்டுக்காண்டு மோசடித் தொகை அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த புள்ளி விவரம் விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டுமே. தமிழக அளவில் கணக்கிட்டால தலைசுத்தும். நவீன தொழில் நுட்பங்கள் வளரவளர நாம் மேலும் விழிப்புணர்வுவோடு அதை அணுகினால் மட்டுமே, இந்த மாதிரியான ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE