தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி @ சென்னை

By செய்திப்பிரிவு

சென்னை: தங்க நகை சிறு சேமிப்பு திட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்து தலைமறைவானதாகக் கூறப்படும் உரிமையாளர்கள், திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அறிந்த முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், கோயம்பேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ”சென்னை வில்லிவாக்கம் பகுதியில் ‘குபேரன் அறக்கட்டளை’ என்றபெயரில் தங்க நகை சிறு சேமிப்பு திட்டத்தைத் தொடங்கி நடத்தி வந்தவர்கள் ரங்கா ரெட்டி, அவரது மனைவி ஜெய லட்சுமி மற்றும் குடும்பத்தினர். இவர்கள் தங்கம் மற்றும் வீட்டு மனைகள் தருவதாகக் கூறி வாரம் ரூ.250 வசூலித்துள்ளனர். 300-வது வார முடிவில் 3 பவுன் தங்கம் தருவதாக உறுதி அளித்துள்ளனர். மேலும், நிலம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியதாகக் கூறப்படுகிறது.

இதை உண்மை என நம்பி வில்லிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டியுள்ளனர். ஆனால், பணம் கட்டி முடித்தவர்களுக்கு அறிவித்தபடி தங்கம் கொடுக்காமல் இருந்தனராம். இப்படி, கோடிக் கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் வில்லிவாக்கம் காவல் நிலையம், சென்னை மத்திய குற்றப் பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம்முதல் ரங்கா ரெட்டி குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார். அவர்களை போலீஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், புகாருக்குள் ளான ஜெயலட்சுமி, மகன் மற்றும் 4 வயது பேத்தியுடன் கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் மேட்டுக் குப்பம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

இதைக் கேள்விப்பட்டு, அவர்களிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் சம்பவ இடம் விரைந்து ஜெய லட்சுமி, அவரது மகனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். தகவல் அறிந்து கோயம்பேடு காவல் நிலைய போலீஸார் நிகழ்விடம் விரைந்து ஜெய லட்சுமி மற்றும் அவரது மகனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE