குமரி ஆலய இல்லத்தில் போக்குவரத்து ஊழியர் கொலை: திமுக ஒன்றிய செயலாளர், பாதிரியார் உட்பட 15 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்/சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு கிறிஸ்தவ ஆலய இல்லத்துக்குள் அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, திமுக ஒன்றியச் செயலாளர், இரு பாதிரியார்கள் உட்பட 15 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி திங்கள்சந்தை அருகேயுள்ள மைலோடில் மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பாதிரியாராக ராபின்சன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், ஆலய கணக்குகள் குறித்து மைலோடு மடத்துவிளையைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார்(42) கேள்வி கேட்டுள்ளார். மேலும், ஆலய நிர்வாகத்தில் குளறுபடிகள் நடப்பதாக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இவர், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவராகவும் இருந்துள்ளார்.

சேவியர் குமாரின் மனைவி ஜெமீலா மைலோடு, ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், அவரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. சேவியர் குமார் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், மீண்டும் பள்ளியில் பணியில் சேர்ப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மைலோடு ஆலயத்தில் உள்ள பாதிரியார் இல்லத்துக்கு நேற்று முன்தினம் மதியம் சேவியர்குமார் சென்ற நிலையில், மாலையில் ரத்தக் காயங்களுடன் அங்கு இறந்து கிடந்தார். அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல் பரவியதால், நாம் தமிழர் கட்சியினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவு சேவியர் குமார் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரது உடலை வாங்க மறுத்து,உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சேவியர் குமார் கொலை தொடர்பாக மைலோடைச் சேர்ந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன், முரசங்கோடு பாதிரியார் பெனிட்டோ உள்ளிட்ட 15 பேர் மீதுகொலை உட்பட 9 பிரிவுகளில் இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில், சேவியர் குமாரைக் கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பில் டிஜிபி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது.

பின்னர், வழக்கறிஞர் பாசறை மாநிலத் தலைவர் சேவியர் பெலிக்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதை தடுக்கும் நோக்குடன் சேவியர்குமாரை திமுகவினர் கொலை செய்துள்ளனர்.

அமைச்சர் மனோ தங்கராஜின் தூண்டுதலின் பேரில், திமுக ஒன்றியச் செயலாளர் ரமேஷ் பாபுஇதில் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் சேவியர் குமாரை செல்போனில் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்திருந்தார் ரமேஷ் பாபு. இதுகுறித்து சேவியர்குமார் காவல் துறையில் புகார் அளித்திருந்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்யவில்லை என்றால், தமிழகம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சீமான் கண்டனம்: இது தொடர்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திமுக வன்முறைக் கும்பலால் நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, சேவியர்குமார் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையேல் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE