ஆம்பூர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் விபத்து: 2 கார்கள் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் நேற்று இரவு 7 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் மீது வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரில் மோதிய கார், எதிர் திசையில் வேலூர் நோக்கிப் பயணித்த கார் மீதும் மோதியது.

இதில், வேலூர் நோக்கிச் சென்றகாரில் பயணம் செய்த குடியாத்தம் சரவணன் (48) மற்றும் பெங்களூரு நோக்கிச் சென்ற காரில் பயணித்த சிவா (32), அவரது தாய் ரோஜா (55) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சரவணனின் மனைவி சாந்தா (40), மகன் மைத்ரேயன் (20), சகோதரர் குமரேசன் (30), தந்தை மாதவன் (57) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 கி.மீ தொலைவுக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பத்தூர் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் விபத்து நேரிட்ட இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். விபத்து தொடர்பாக ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பெங்களூரு தாசன்புராவைச் சேர்ந்த மாதவனின் மகன் சிவாவுக்கு, சென்னை மணலியில் பெண் பார்த்துவிட்டு, குடும்பத்துடன் ஊர் திரும்பியுள்ளனர். காரை சிவா ஓட்டியுள்ளார். அதேபோல, குடியாத்தம் சந்தப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த சரவணன் குடும்பத்துடன் தருமபுரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஊர் திரும்பியுள்ளார். இவர்கள் பயணம் செய்த கார்கள் பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது விபத்து நேரிட்டது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE