சென்னையில் கொக்கைன் விற்பனை | 3 நைஜீரியா்கள் கைது; போதைப் பொருள், பணம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அமைந்தகரை பகுதியில் கொக்கைன் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 1 பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் 1 கிலோ கொக்கைன், ரொக்கம் ரூ.2 லட்சம் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அமைந்தகரை ( K-3) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று (ஜன.20) அமைந்தகரை, ஷெனாய் நகர், மெட்ரோ ரயில் நிலையம் அருகே கண்காணித்தபோது, அங்கு ஒருவர் ரகசியமாக போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், காவல் துறையினர் போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அஜாகு சினேடு ஒனாச்சி (47) என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். மேலும் விசாரணையில் அஜாகு சினேடு ஓனாச்சி அளித்த தகவலின் பேரில் இவ்வழக்கில் தொடர்புடைய இவரது மனைவி எஸ்மெல்சியா மிகாஷ் (எ) லியோனி (50), அமேசீயோன் இனலெக்வு (40) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 1 கிலோ கொக்கைன் போதை பொருள், ரொக்கம் ரூ.2 லட்சம் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் இன்று (ஜன.21) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE