விருதுநகரில் மனைவியை வெட்டிக் கொன்ற நபர் சரண்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை வெட்டிக் கொலை செய்த லாரி ஓட்டுநர் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார்.

விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் செந்தூர பாண்டி (40). தண்ணர் லாரி ஓட்டுநர். இவரது மனைவி கல்பனா தேவி (37). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகா சக்தி குமார் (14), செல்வ கணேஷ் (11) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கல்பனா தேவியின் நடத்தையில் செந்தூர பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடும் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், கணவரைப் பிரிந்த கல்பனா தேவி தனது இரு மகன்களுடன் இந்திரா நகரில் வாடகை வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வந்தார். மேலும், செந்தூர பாண்டியிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை மகா சக்தி குமாரும், செல்வ கணேஷும் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். கல்பனா தேவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இன்று பிற்பகல் கல்பனா தேவி வீட்டுக்கு செந்தூர பாண்டி சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த செந்தூர பாண்டி தான் வைத்திருந்த பயங்கர ஆயுதத்தால் கல்பானா தேவியை சரமாரியாகக் தாக்கியுள்ளார். மேலும், கழுத்திலும் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த கல்பனா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் செந்தூர பாண்டி சரணடைந்தார்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய பின், சம்பவ இடத்திற்குச் சென்று கல்பனா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து செந்தூர பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE