போக்சோவில் கைதானவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வலியுறுத்தி மறியல் @ உதகை

By செய்திப்பிரிவு

உதகை: உதகை அருகே பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வலியுறுத்தி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி தம்பதியின் 9 வயது மகள், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விடுமுறை தினம் என்பதால் தோழிகளுடன் திருவிழாவில் கலந்து கொண்டு, நேற்று முன்தினம் மாலை சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அஜித் ( 23 ) என்ற இளைஞர், சிறுமியை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சிறுமியை பொதுமக்கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, பொது மக்கள் விரட்டி சென்று அஜித்தை பிடித்து தாக்கி, புதுமந்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, புது மந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி, உதவி ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான போலீஸார், போக்சோ உட்பட 6 பிரிவுகளில் அஜித் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அஜித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி, உதகை - கூடலூர் சாலை தலை குந்தா சந்திப்பில் பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சாலையின் இரு புறமும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் உதகை கோட்டாட்சியர் மகாராஜ், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பாமா, நீலகிரி கூடுதல் எஸ்பி சவுந்தர ராஜன், உதகை டிஎஸ்பி யசோதா, காவல் ஆய்வாளர்கள் மணி குமார், முரளிதரன் தலைமையிலான போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குண்டர் தடுப்பு சட்டத்தில் அஜித்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் சார்பில் எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டதால் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜாமீனில் வந்தவர்: கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித், மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்து, தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE