ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் மீது வழக்கு @ மோகனூர்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த நாமக்கல் இளைஞர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோகனூர் ராசிகுமாரி பாளையம் முருகன் நகரைச் சேர்ந்தவர் அகல்யா ( 27 ). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், நாமக்கல் டவுன் ஏ எஸ் பேட்டை முல்லை நகரைச் சேர்ந்த ராஜா ( 35 ) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்னர் ராஜா தான் ஐஏஎஸ் அதிகாரி எனவும், அரசுப் பணியில் இருப்பதாகவும் கூறி திருமணம் செய்துள்ளார். அதற்கு முன்னர் வங்கி மேலாளராக இருந்ததாகவும் கூறியுள்ளார். எனினும், திருமணத்துக்குப் பின்னர் ராஜா வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததால், அகல்யாவுக்கு அவர் பணியின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும், இது தொடர்பாக ராஜாவின் உறவினர்களிடம் விசாரித்த போது, ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி ராஜா ஏமாற்றி திருமணம் செய்தது தெரிந்தது. இது தொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில், அகல்யா புகார் செய்தார். இதையடுத்து, போலி ஆவணம் தயாரித்தல், நம்பிக்கை மோசடி செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராஜா, அவரது தாயார், சித்தி, மாமா ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE