புதுச்சேரியில் 2 ஆண்டுகளில் 285 வழக்குகள், 672 பேர் கைது, 216.1 கிலோ கஞ்சா பறிமுதல்: எஸ்பி தகவல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 285 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 216.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஒழிக்க வேண்டி ‘‘ஆபரேஷன் விடியல்’’ என்ற பெயரில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோயில் ஏரிக்கரை அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக இருதினங்களுக்கு முன்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நெட்டப்பாக்கம் சரக ஆய்வாளர் கீர்த்திவர்மன் தலைமையிலான போலீஸார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த 3 பேர் போலீஸாரை கண்டதும் தப்பிக்க முயன்றனர்.

இருப்பினும் அவர்களை மடக்கி பிடித்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் பள்ளித்தென்னல் சத்யா நகரைச் சேர்ந்த ஆனந்தன்(25), திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டை முகமத் அர்ஷத் (34), கண்டமங்கலம் பள்ளித் தென்னல் அருள்(எ)அன்புசெழியன் (24) என்பதும், இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த 1.25 கிலோ கஞ்சா, 3 செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த நவீன்(எ) ஆண்டகுண்டா நவீன்குமார் (28), சதீஷ்(எ)கையார்பு சதீஷ் (31), ஷேக் பாபுலு (22), அரவ ஜேம்ஸ் (21) ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதும், லாரி ஓட்டுநர்களான இவர்கள் 4 பேரும் ஆந்திராவில் இருந்து வரும்போது கஞ்சாவை மொத்தமாக புதுச்சேரிக்கு எடுத்து வந்து ஆனந்தன் உள்ளிட்டோரிடம் கொடுத்து விற்பனை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து நவீன் உள்ளிட்ட 4 பேரையும் நேற்று கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 4.5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக சீனியர் எஸ்பி நாரா சைதன்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஆபரேஷன் விடியல் தொடங்கியதில் இருந்தே புதுச்சேரியில் போதை பொருட்கள் குறிப்பாக கஞ்சா விற்பனையைத் தடுக்க புதுச்சேரி காவல்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அதன்படி கடந்த 2022-ல் 137 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 311 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 87.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 128.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தினசரி ஒருவரை கஞ்சா வழக்கில் போலீஸார் கைது செய்து வருகின்றனர். தொடர்ந்து கஞ்சா நடமாட்டத்தை தடுக்க தீவிரமாக பணியற்றி வரும் போலீஸாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கஞ்சா மற்றும் போதை பொருள் நடமாட்டம், விற்பனை செய்தல், பதுக்கி வைத்தல் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தால் 112 என்ற கட்டணமில்லா எண்ணுக்கும், 9489205100 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியம் காக்கப்படும். புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் காவல் துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டில் 22 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் மற்றும் மனநோயாளிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கல்வி நிறுவனங்களில் ஆன்டி-நார்கோடிக்ஸ் செல் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை பொருத்தவரையில் இருசக்கர வாகன திருட்டை தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் 17 திருட்டு இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை அனைத்து காவல் நிலைய போலீஸாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனை, பெண்களை கேலி செய்வதை தடுப்பது, பொது இடங்களில் மது அருந்துபவர்களை பிடிப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, இளம் குற்றவாளிகள் என அனைத்தையும் உள்ளூர் போலீஸார் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்