மிஷன் கல்லூரி திட்டம் மூலம் 5 மாதங்களில் 189 கிலோ கஞ்சா பறிமுதல் @ கோவை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை, புழக்கத்தை தடுக்க, அது தொடர்பான தகவல்களைப் பெற மாவட்ட காவல் துறையினரால் தொடங்கப்பட்ட ‘மிஷன் கல்லூரி’ திட்டம் கைகொடுப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. மாணவர்களிடம் போதைப் பொருட்களின் பயன்பாடு இருப்பது அவர்களின் எதிர்காலத்தை மட்டுமின்றி, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்கும் வகையில் ‘மிஷன் கல்லூரி’ என்ற திட்டம் மாவட்ட காவல்துறையினரால் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்களின் புழக்கத்தையும், பயன்பாட்டையும், விற்பனையையும் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த ஜூலை இறுதியில் ‘மிஷன் கல்லூரி’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 116 கல்லூரிகளில் சிறப்புக் குழு தொடங்கப்பட்டு, போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். போதைப் பொருட்கள் விற்பனை குறித்து தகவல் அளிக்க ஏதுவாக போலீஸாரின் தொடர்பு எண்களையும், மாணவர்களிடம் கொடுத்துள்ளோம்.

மாணவர்களுடன் பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோம். ஹெல்ப் லைன் எண், விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளோம். சிறப்புக் குழு மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையாளர்களை கண்டறிந்து கைது செய்துள்ளோம். ‘மிஷன் கல்லூரி’ திட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்களில் இருந்து, 5 மாதங்களில் 189 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். அது தவிர, கடந்த 2023-ம் ஆண்டு மாவட்ட காவல் துறையில் 449 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 590 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.01 கோடி மதிப்புள்ள 742 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பாக 658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 676 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE