கணவர் மூலம் குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் கருவுற உதவினால் பரிசு தருவதாக கூறி மோசடி: பிஹாரில் 8 பேர் கைது

By செய்திப்பிரிவு

பாட்னா: ஹார் மாநிலம் நவடா மாவட்டத்தில் குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் கருவுற உதவினால் ரூ.13 லட்சம் பரிசு தருவதாகக் கூறி, இணைய வழியில் ரூ.799 வசூலித்த மோசடி கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பிஹார் போலீஸார் கூறியதாவது:

நவடா மாவட்டத்தில் ‘ஆல் இந்தியா பிரெக்னன்ட் ஜாப் எஜென்சி’ என்ற பெயரில் இயங்கிவந்த ஒரு நிறுவனம், ஆண்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவலை அனுப்பி உள்ளனர். அதில், “தனதுகணவர் மூலம் கருவுற முடியாத பெண்களை கருவுறச் செய்ய ஆட்கள் தேவை” என கூறி உள்ளனர். இதை உண்மை என நம்பிய சிலர் இணைய வழியில் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அவர்களிடம் பதிவுக்கட்டணமாக ரூ.799-ஐ வசூலித்துள்ளனர்.

இதையடுத்து, சில பெண்களின்புகைப்படங்களை அந்த நபர்களுக்கு அனுப்பி, பிடித்தவர்களை தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளனர். அவர்கள் விருப்பம் தெரிவித்த பிறகு, ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செக்யூரிட்டி டெபாசிட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தேர்வு செய்யும் பெண்களின் அழகுக்கு ஏற்ப டெபாசிட் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். அத்துடன், குறிப்பிட்ட பெண் கருவுற்றுவிட்டால் ரூ.13 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதேநேரம், கருவுறாவிட்டாலும் ஆறுதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இதனால் பேராசை கொண்ட ஆண்கள் சிலர் டெபாசிட் தொகையை செலுத்தி வந்துள்ளனர்.

இந்த இணையதள மோசடிகுறித்து புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துவிசாரணை நடத்தி வருகிறோம். அவர்களிடமிருந்து 9 செல்போன்கள், 2 பிரின்டர்கள் மற்றும்சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முன்னா குமார் தப்பிவிட்டார். அவரை தேடி வருகிறோம்.

இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE