கோவை, திருப்பூரில் 2023-ல் குற்ற சம்பவங்கள் குறைவு: காவல் துறை தகவல்

By செய்திப்பிரிவு

கோவை / திருப்பூர்: கோவை, திருப்பூரில் போலீஸார் எடுத்த தீவிர நடவடிக்கையால், 2023-ல் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக, இரு மாநகர காவல் ஆணையர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகரில் நடப்பாண்டு நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குற்றச் சம்பவங்கள் தொடர்பாக காவல் துறை கையாண்ட விதம் குறித்த ஆய்வு நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வின் போது, 2022-ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2023-ம் ஆண்டு ஆதாயக் கொலை, கூட்டுக் கொள்ளை, வழிப் பறி சம்பவங்கள் குறைந்துள்ளன.

2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023-ம் ஆண்டு 37 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. வரும் 2024-ம் ஆண்டில் போதைப் பொருட்கள் நடமாட்டம், விபத்து, குற்றங்களை குறைக்க முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும், என்றார்.

இதேபோல திருப்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று காவல் ஆணையர் பிரவீன் குமார் அபி நபு கூறியதாவது: கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திருப்பூர் மாநகரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழ் தொழிலாளர்கள் தாக்குவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவின. அப்போது, வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த அசாதாரண சூழ்நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, வட மாநிலத் தொழிலாளர்களின் ஆவணங்களை தொழிலாளர் நலத்துறை பதிவு செய்து வருகிறார்கள்.

அதில் பல்வேறு முன்னேற்றங்களை வரும் நாட்களில் காண உள்ளோம். நடப்பாண்டில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட குற்றவாளிகள் மீது தனிக் கவனம் செலுத்தி, 24 வழக்குகளில் 41 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்குள் விசாரணை முடிக்கப் பட்டு தண்டனை பெற்றுத்தரப் பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் 2022-ம் ஆண்டு இறுதியில் 11 ஆயிரத்து 91 வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வந்தது. நடப்பு ஆண்டு 4,845-ஆக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் விபத்தில் 142 பேர் இறந்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் புஷ்பா ஜங்ஷனில் ஒரு வழிப் பாதையாக மாற்றியுள்ளோம். திருப்பூர் மாநகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 76 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 கொலைகள் நிகழ்ந்துள்ளன. நடப்பாண்டில் 247 கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 216 வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். ரூ.2 கோடியே 96 லட்சத்து 5 ஆயிரத்து 787 சொத்து மதிப்பில், ரூ.2 கோடியே 56 லட்சத்து 24 ஆயிரத்து 517 மதிப்புள்ள நகை உள்ளிட்ட சொத்துகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

74 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோத கஞ்சா விற்பனை தொடர்பாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 176.370கிலோ கஞ்சா, கஞ்சா கடத்த பயன்படுத்திய 37 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 1746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1757 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,397 கிலோ குட்காவும், கடத்தலுக்கு பயன்படுத்திய 8 இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனம், 4 நான்கு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. பள்ளிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 102 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 2430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட 2437 பேர் கைது செய்யப்பட்டனர். மோட்டார் வாகன சட்டங்களை மீறியதாக 2 லட்சத்து 1 ஆயிரத்து 627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.12 லட்சத்து 31 ஆயிரத்து 74 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகரில் நடப்பாண்டில் 2 ஆயிரம் கேமராக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 7 ஆயிரம் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்தாண்டை காட்டிலும் குற்றங்கள் குறைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள் அபிஷேக் குப்தா, வனிதா ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE