அமலாக்க துறை அதிகாரி அங்கித் திவாரி நீதிமன்ற காவல் ஜன.11 வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவலை ஜன.11-ம் தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவராகப் பணிபுரிபவர் சுரேஷ் பாபு. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்காமல் இருக்க லஞ்சம் தர வேண்டும், என மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கூறியதுடன் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பெற்றுள்ளார். பின்னர், இரண்டாவது தவணையாக ரூ.20 லட்சம் பணம் பெறும் போது, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவரது ஜாமீன் மனு, மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரது நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடி வடைந்தது. இதையடுத்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் மாஜிஸ்திரேட் பிரியா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது, அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவலை ஜன.11-ம் தேதி வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் பிரியா உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE