காஞ்சிபுரத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை: காயமடைந்த 2 போலீஸார் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் போலீஸாரை தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற 2 ரவுடிகள், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த 2 போலீஸார் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவது, மாமூல் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.ஜி. கண்ணன் எச்சரித்துள்ளார்.

காஞ்சிபுரம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சரவணன் என்ற பிரபாகரன் (35). இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவரை 4 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்தது. காஞ்சிபுரம் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திது.

இந்த நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த கொலையில் தொடர்பு உடையவர்கள் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையிலான போலீஸார் அங்கு சென்றனர்.

சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதற்காக போலீஸார் நெருங்கிய நிலையில், சுதாரித்துக்கொண்ட அவர்கள், போலீஸாரை சரமாரியாக தாக்கிவிட்டு ஓடினர். இந்த தாக்குதலில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சுகுமார் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

இதையடுத்து, தாக்கிவிட்டு தப்பி ஓடும் நபர்களை சுட்டுப் பிடிப்பதற்காக போலீஸார் அவர்களை நோக்கி சுட்டனர். இதில் பாட்ஷா என்ற கருப்பு ஹுசைன் (29), ரகு என்ற ரகுவரன் (35) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை போலீஸார் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.

முன்னதாக, ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த சிறப்பு உதவிஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சுகுமார் ஆகிய இருவரும் தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் வடக்கு மண்டலஐ.ஜி. கண்ணன் அவர்களை சந்தித்துஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நடந்த ரவுடி கொலை சம்பவம், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இதற்குள், போலீஸ் தேடுவதை அறிந்தகுற்றவாளிகள், கொலைக்கு பயன்படுத்திய காரை ஒரகடம் பகுதியில் விட்டுவிட்டு தப்பிவிட்டனர். 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தோம். காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து வந்தோம். பிடிக்க முயன்றபோது, போலீஸாரை அவர்கள் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளுக்குள் ஏற்படும் மோதலில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

375 ரவுடிகள் தீவிர கண்காணிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 375 ரவுடிகள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தகவல் சேகரிக்கும் முறையை மேம்படுத்தி உள்ளோம். தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மாமூல் கேட்பது போன்ற செயல்களில் ரவுடிகள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். டிஐஜி பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE