சென்னை | நாட்டு வெடிகளை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: அனுமதியின்றி நாட்டு வெடி பட்டாசுகளை வீட்டில் பதுக்கி விற்பனை செய்ததாக வியாபாரி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் சில வியாபாரிகள் சட்ட விரோதமாக பட்டாசுகளை (நாட்டு வெடிகள்) பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, எம்ஜிஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

முதல்கட்டமாக நெசப்பாக்கம், கண்ணதாசன் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டைக் கண்காணித்து, சோதனை நடத்தினர். அப்போது அங்கு உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்து, ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வகுமார் (38) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 320 பேப்பர் ரோல் பட்டாசுகள் (பெரியது), 104 பேப்பர் ரோல் பட்டாசுகள் (சிறியது), 1,854 சணல் பட்டாசுகள் (சிறியது) பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பட்டாசுகளில் சிலவகை பட்டாசுகள் அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவை விட அதிக சத்தத்துடன் வெடிக்கக் கூடியவை ஆகும். மேலும், கைதான செல்வகுமார் அரசு அனுமதியின்றி வேலூர், ஆற்காடு, புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தனது காரில் நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி வந்து சுற்றுப்புற பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE