சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். இது தொடர்பாக சேலம் எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வுப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிக்காக, சங்ககிரியைச் சேர்ந்த ஹேமத்துல்லா (45), இப்ராகிம் (25), ராஜ்குமார் (30) ஆகியோர் காவல் நிலையத்தைச் சுற்றிலும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பிறகு சேகரிக்கப்பட்ட குப்பைகளை, காவல் நிலைய வளாகத்தில் குவித்து தீ வைத்தனர்.

தீ வைக்கப்பட்ட குப்பைகளில் இருந்து வெடித்த மர்மப் பொருள், காவல் நிலைய மேற்கூரையில் விழுந்து மீண்டும் வெடித்தது. இதில் ஹேமத்துல்லா காலில் தகரம் கிழித்ததில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்த போலீஸார் மற்றும் மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஹேமத்துல்லாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மேலும், காவல் நிலையத்துக்கு சாலை விபத்து சம்பந்தமாக விசாரணைக்கு வந்த பவானியைச் சேர்ந்த பரத் என்பவரும் தகரம் பட்டதில் காயமடைந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையத்தில் மர்மப் பொருள் வெடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஏராளமான மக்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி அருண் கபிலன் காவல் நிலையத்திற்கு வந்தார். பின்னர், மர்மப் பொருள் வெடித்த பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சங்ககிரி டிஎஸ்பி ராஜா, காவல் ஆய்வாளர் தேவி ஆகியோரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும், காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதனிடையே, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், காவல் நிலையத்தில் தூய்மைப் பணியின்போது சேகரிக்கப்பட்ட குப்பைகளில் பட்டாசு இருந்துள்ளது. இதனை சரிவர கவனிக்காமல் தீயிட்டு எரித்ததில் பட்டாசு வெடித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE