ஓய்வு பெற்ற அதிகாரி மசூதியில் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காஷ்மீரின் பாரமுல்லா பகுதியைச் சேர்ந்தவர் மொகுத் ஷபி மிர் (72). ஒய்வுபெற்ற காவல் அதிகாரியான இவர், பாரமுல்லா பகுதியில் உள்ள மசூதியில் மவுலியாக இருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை மசூதிக்கு சென்ற மொகுத் ஷபி மிர்ரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து ஷபி மிர்ரின் தம்பி அப்துல் கரீம் மிர் கூறுகையில், ‘காலையில் ஸ்பீக்கரில் பாங்கு ஒலித்துக் கொண்டிருந்தபோது, பாதியில் சத்தம் நின்றது. மைக்ரோபோன் வேலை செய்யவில்லை என்று நினைத்தோம். பின்னர்தான், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரிந்தது’’ என்றார்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, ‘‘தீவிரவாதிகளின் தாக்குதலில் 5வீரர்கள் உயிர்தியாகம் செய்துள்ளனர். ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த 3 அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகின்றனர். தற்போது ஓய்வுபெற்ற எஸ்.பி. சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டுவர மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அப்பாவி மக்கள் பாதிப்படைகின்றனர்’’ என கூறியுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாக்குர் கூறுகையில், ‘‘72 வயதான ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை சுட்டுக் கொல்வது கொடூரமான செயல். சாத்தான்களின் பிள்ளைகளான தீவிரவாதிகளுக்கு பாங்கை கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு மதமே இல்லை. மொகுத் ஷபி மிர் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

ஜம்முவின் அக்னூர் பகுதியில் தீவிரவாத ஊடுருவல் முறியடிக்கப்பட்ட மறுநாளில் இந்த கொலை சம்பவம் நடை பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE