ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தியதாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் கைது: 3 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் ஆந்திராவில் அந்த மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(45). இவர் ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி செய்து வருகிறார். மேலும், அக்காவல் நிலைய ஆய்வாளருக்கு ஓட்டுநராகவும் பணியாற்றினார். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 17-ம் தேதி இரவு சந்திரசேகர் பணியாற்றிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம், சத்தியவேடு காவல் நிலைய போலீஸார் சந்திரசேகர் மற்றும் 14 பேரை செம்மரம் கடத்தியதாகப் பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 டன் செம்மரக்கட்டைகள், 2 கார்கள், ஒரு சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைக் காவலர், ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் தமிழக போலீஸார் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE