கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு போதைப்பொருள் விற்பனை: கேரளாவைச் சேர்ந்த 7 பேர் கைது

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளிடம் கஞ்சா மற்றும் போதைக் காளான் விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை தாராளமாக நடக்கிறது. இந்நிலையில் இன்று (டிச.14) காலை கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் ஒரு தனியார் விடுதியில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்று போலீஸார் சோதனையிட்டனர். அதில், கஞ்சா மற்றும் போதை காளானை பதுக்கி வைத்து சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் சங்கமுகம் பகுதியைச் சேர்ந்த ஜோஸ் (30), மலப்புரம் ரைஸ் (18), பத்தினம் திட்டா பகுதியைச் சேர்ந்த அனீஸ் (34), திருவனந்தபுரத்தை சேர்ந்த அகில் பெர்னாண்டஸ் (27), டொமினிக் பீட்டர் (28), ஜெய்சன் (29), கடனம்பள்ளியை ஜான் பாப்டிஸ்ட் (23) ஆகியோரை கைது செய்து 750 கிராம் கஞ்சா, 5 கிராம் போதை காளானை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE