தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: புதுச்சேரியில் போலி மருத்துவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்த வழக்கில், புதுச்சேரி அருகே போலி மருத்துவராக செயல்பட்டவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி அருகேயுள்ள ஏம்பலம் கிராமத்தில் ஜோதி என்பவர் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். முறையாக மருத்துவக் கல்வி படிக்காமலேயே நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு புதுச்சேரி கம்பளிக்காரன் குப்பம் பேட் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் மகள் மாரியம்மாள் (23) உடல் நலம் பாதித்து ஜோதியிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவருக்கு ஜோதி ஊசி மற்றும் குளுக்கோஸ் செலுத்தியுள்ளார். உடனே மாரியம்மாள் மயக்கமடைந்து அடைந்துள்ளார். அதனால், அவரை உடனே கரிக்கலாம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், வழியிலேயே மாரியம்மாள் உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, மாரியம்மாள் உயிரிழப்பிற்கு தவறான சிகிச்சையே காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து, மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ஜோதி (55) கைது செய்யப்பட்டார். இதனிடையே, இவ்வழக்கு விசாரணை புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜோதிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதன்படி ஜோதி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக விநாயகம் ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE