பாலியல் வழக்கில் உ.பி. பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்ட் குற்றவாளி

By செய்திப்பிரிவு

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2014-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்ட் குற்றவாளி என்று சோன்பத்ரா மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பொதுவாக சிறுமிகளிடம் அத்துமீறும் நபர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2022-ல் துத்தி தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வானவர் கோண்ட். பாலியல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்த அவர் எம்.பி., எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஈஷன் உல்லா கான் குற்றச்சாட்டை உறுதிசெய்ததைத் தொடர்ந்து மீண்டும்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எந்தவொரு எம்பி அல்லது எம்எல்ஏவும் குற்றத்தில் ஈடுபட்டு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெறும்பட்சத்தில் அவர் உடனடியாக பதவி இழப்புக்கு ஆளாவார்.

கோண்ட் எம்எல்ஏ ஆன பிறகுபாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு பல்வேறு வகையில் அழுத்தங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது குடும்பத்தினர் நடத்திய இடைவிடாத சட்டப் போராட்டத்தால் தற்போது நீதி கிடைத்துள்ளது. கோண்டுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகளுக்கு குறையாத தண்டனையை தரும் என்று நம்புவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமி தற்போது திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE