ரூ.2,438 கோடி வசூலித்த ஆருத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான நடிகர் ஆர்.கே.சுரேஷ் போலீஸ் விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘ஆருத்ரா கோல்டு டிரேடிங்’ என்ற பெயரில் ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என கூறியது.

இதை நம்பி பலர், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அந்த நிறுவனம், 1,09,255பேரிடம் ரூ.2,438 கோடி வரை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 10-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கைது செய்தனர்.

லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு: இந்த வழக்குத் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி வரை முடக்கப்பட்டது. மேலும், ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 125-க்கும் அதிகமான சொத்துகளும் முடக்கப்பட்டன. இந்த வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷும் சிக்கி இருந்தார். அவர் ஆருத்ரா தொடர்புடையவர்களிடமிருந்து ரூ.15 கோடி வரை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த அவரை நேரில் ஆஜராகும்படி பல முறை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர் விமானநிலையம் வந்தால் அவரை கைதுசெய்து ஒப்படைக்கும்படி அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆர்.கே.சுரேஷுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்களே போலீஸார் முன் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தனர். ஆர்.கே.சுரேஷ் துபாயில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆர்.கே.சுரேஷ் டிச.12-ம் தேதி, பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் எனவும், அதுவரை அவரை கைது செய்யக் கூடாது எனவும் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ஆர்.கே.சுரேஷ் இருதினங்களுக்கு முன்னர் துபாயி லிருந்து விமானம் மூலம் சென்னைவந்தார்.

இன்றும் ஆஜராக உத்தரவு: இந்நிலையில், உறுதி அளித்தபடி நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேற்று காலை 10.45 மணியளவில் சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு வந்துஅப்பிரிவு கூடுதல் எஸ்.பி வேல்முருகன் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் நேற்று மாலை வரைசுமார் 7 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். நாளையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE