சென்னையில் கடந்த 2 வாரங்களில் கஞ்சா கடத்தல் வழக்கில் 91 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக சென்னையில் கடந்த 2 வாரங்களில் 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்யகாவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்புநடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோர், பதுக்குவோர், கடத்துபவர்களைக் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் கடந்த மாதம்27-ம் தேதி முதல் இந்த மாதம் 10-ம் தேதி வரையிலான 2 வாரங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 40.8 கிலோ கஞ்சா, 4 கிராம் மெத்தம்பெட்டமைன், 3,623 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 5 செல்போன்கள், 10இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ, 1 இலகுரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் நடப்பாண்டில் இதுவரை, போதைப் பொருட்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 814 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,782 பேரின் சொத்து மற்றும் வங்கிகணக்கு விவரங்களைச் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 866 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தஆண்டில் இதுவரை 78 பேர்குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE