கர்னி சேனா தலைவர் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

சண்டிகர்: கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்டிரிய ராஜபுத்திர கர்னி சேனா அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக சுக்தேவ் சிங்கோகமெடி இருந்தார். கடந்த 5-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு 2 மர்ம நபர்கள் சென்றனர். அவர்களுடன் சுக்தேவ் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென 2 மர்ம நபர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுக்தேவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரோடு இருந்த 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில் சுக்தேவை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள், ஹரியாணாவை சேர்ந்த நிதின், ராஜஸ்தானை சேர்ந்த ரோகித் ரத்தோட் என்பது தெரிய வந்தது.

இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று போலீஸார் அறி வித்தனர்.

இந்த சூழலில் நிதினும் ரோகித்தும் தங்க இடம் அளித்த ரம்வீர் சிங் என்பவர் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள விடுதியில் பதுங்கியிருந்த நிதின், ரோகித் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு துணையாக இருந்த உத்தம் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் கூறியதாவது:

கர்னி சேனா தலைவர் சுக்தேவ் கொலையில் லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது. அந்த கும்பலை சேர்ந்த ரோகித் கடோரா வெளிநாட்டில் பதுங்கி உள்ளார். அவரதுஉத்தரவின்பேரில் நிதினும் ரோகித் ரத்தோட்டும் சேர்ந்து சுக்தேவை கொலை செய்துள்ளனர்.

கொலையாளி ரோகித் ரத்தோட்கர்னி சேனா தலைவர் சுக்தேவ் இடையே ஏற்கெனவே முன்பகை இருந்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் ரோகித் ரத்தோட் சிறை செல்ல சுக்தேவ் காரணமாக இருந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஒருவரையும், ஞாயிற்றுக்கிழமை 3 பேரையும் கைது செய்துள்ளோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் நிதின் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். வெளிநாட்டில் பதுங்கியுள்ள லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலை சேர்ந்த ரோகித் கடோரா குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.

இவ்வாறு ராஜஸ்தான் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE